Majjhima Nikāya 131

பத்தேகாரட்ட சூத்திரம்

பத்தேகாரட்ட

சிராவஸ்தி நகரில் ஜெதா வனத்து விகாரையில் தங்கியிருந்த போது பகவான் புத்தர் கூறிய இவ்வார்த்தைகளை நான் கேட்டேன். பகவர் எல்லாத் துறவிகளையும் அழைத்து அவர்களுக்கு அறிவுறுத்தினார், "பிக்குகளே!"

பிக்குகள் பதிலளித்தனர், "கூறுங்கள் ஐயா."

பகவர் போதித்தார், " 'தனித்து வாழச் சிறந்த வழி' எது என்பதைப் பற்றி உங்களுக்குக் கூறுகிறேன். முதலில் மேலோட்டமாகவும், பின் விளக்கமாகவும் கூறுகிறேன். பிக்குகளே கூர்ந்து கேளுங்கள்."

"பகவரே, நாங்கள் கேட்கிறோம்."

புத்தர் கூறினார்:

"கடந்த காலத்தைத் தொடர வேண்டாம்.
எதிர்காலத்தை நினைத்து அதில் தொலைந்து விட வேண்டாம்.
கடந்த காலம் இனி வரப்போவதில்லை.
எதிர் காலம் இன்னமும் வரவில்லை.
இங்கேயே இப்போதே, உள்ள வாழ்வைக் கூர்ந்து கவனித்துப் பயில்வோர்
நிலையாகவும் சுதந்திரத்துடனும் திகழ்வார்கள்.
நாம் இன்றே விவேகத்துடன் இருக்க வேண்டும்.
நாளைவரை காத்திருந்தால் தாமதமாகி விடும்.
மரணம் எதிர்பாராமல் வருவது.
அதனோடு யார் வாதிடுவது?
இரவும் பகலும்
கவனத்தைக் கடைப்பிடித்து வாழ்பவனைச் சான்றோர்
'தனித்து வாழச் சிறந்த வழியைத் தெரிந்தவன்'
என்று கூறுவர்."

"பிக்குகளே, 'கடந்த காலத்தைத் தொடர்வது' என்றால் என்ன?

எவராவது கடந்த காலத்தில் தங்கள் உடல் (body) எப்படி இருந்தது என்று நினைப்பார்களாயின், கடந்த காலத்தில் தங்கள் நுகர்ச்சிகள் (feelings) எப்படி இருந்தது என்று நினைப்பார்களாயின், கடந்த காலத்தில் தங்கள் மனக்குறிப்புகள் (perceptions) எப்படி இருந்தது என்று நினைப்பார்களாயின், கடந்த காலத்தில் தங்கள் எண்ணப் போக்குகள் (mental factors) எப்படி இருந்தது என்று நினைப்பார்களாயின், கடந்த காலத்தில் தங்கள் அறிநிலை (உணர்வு - consciousness) எப்படி இருந்தது என்று நினைப்பார்களாயின், இவ்வாறெல்லாம் நினைப்பதனால் அவர்கள் மனம் இறந்த காலச் செயல்களின் மீது பற்றுக் கொண்டு அந்தப் பாரங்களைச் சுமந்து கொண்டிருப்பார்களாயின் அப்படிபட்டவர் இறந்த காலத்தைத் தொடர்கின்றனர் என்று பொருள்.

"பிக்குகளே, 'கடந்த காலத்தைத் தொடராமல் இருப்பது' என்றால் என்ன?

எவராவது கடந்த காலத்தில் தங்கள் உடல் (body) எப்படி இருந்தது என்று நினைப்பார்களாயின், கடந்த காலத்தில் தங்கள் நுகர்ச்சிகள் (feelings) எப்படி இருந்தது என்று நினைப்பார்களாயின், கடந்த காலத்தில் தங்கள் மனக்குறிப்புகள் (perceptions) எப்படி இருந்தது என்று நினைப்பார்களாயின், கடந்த காலத்தில் தங்கள் எண்ணப் போக்குகள் (mental factors) எப்படி இருந்தது என்று நினைப்பார்களாயின், கடந்த காலத்தில் தங்கள் அறிநிலை (உணர்வு - consciousness) எப்படி இருந்தது என்று நினைப்பார்களாயின், இவ்வாறெல்லாம் நினைத்தும் அவர்கள் மனம் இறந்த காலச் செயல்களின் மீது பற்றுக் கொள்ளாமலும், அவற்றுக்குக் கட்டுப்படாமலும் அவை ஒரு சுமையாக இருக்கவில்லை யென்றால் அப்படிபட்டவர் இறந்த காலத்தைத் தொடரவில்லை என்று பொருள்.

"பிக்குகளே, 'எதிர் காலத்தில் தொலைந்து விடுவது' என்றால் என்ன?

எவராவது எதிர் காலத்தில் தங்கள் உடல் (body) எப்படி இருக்கும் என்று நினைப்பார்களாயின், எதிர் காலத்தில் தங்கள் நுகர்ச்சிகள் (feelings) எப்படி இருக்கும் என்று நினைப்பார்களாயின், எதிர் காலத்தில் தங்கள் மனக்குறிப்புகள் (perceptions) எப்படி இருக்கும் என்று நினைப்பார்களாயின், எதிர் காலத்தில் தங்கள் எண்ணப் போக்குகள் (mental factors) எப்படி இருக்கும் என்று நினைப்பார்களாயின், எதிர் காலத்தில் தங்கள் அறிநிலை (உணர்வு consciousness) எப்படி இருக்கும் என்று நினைப்பார்களாயின், இவ்வாறெல்லாம் நினைப்பதனால் அவர்கள் மனத்திற்கு எதிர் காலச் செயல்கள் ஒரு சுமையாகிவிட்டால் அல்லது அவர்கள் எதிர் காலத்தைப் பற்றி மனக்கோட்டை கட்டிக் கொண்டிருந்தால் அப்படிபட்டவர்கள் எதிர் காலத்தில் தொலைந்து விட்டனர் என்று பொருள்.

"பிக்குகளே, 'எதிர் காலத்தில் தொலையாமல் இருப்பது' என்றால் என்ன? எவராவது எதிர் காலத்தில் தங்கள் உடல் (body) எப்படி இருக்கும் என்று நினைப்பார்களாயின், எதிர் காலத்தில் தங்கள் நுகர்ச்சிகள் (feelings) எப்படி இருக்கும் என்று நினைப்பார்களாயின், எதிர் காலத்தில் தங்கள் மனக்குறிப்புகள் (perceptions) எப்படி இருக்கும் என்று நினைப்பார்களாயின், எதிர் காலத்தில் தங்கள் எண்ணப் போக்குகள் (mental factors) எப்படி இருக்கும் என்று நினைப்பார்களாயின், எதிர் காலத்தில் தங்கள் அறிநிலை (உணர்வு - consciousness) எப்படி இருக்கும் என்று நினைப்பார்களாயின், இவ்வாறெல்லாம் நினைத்தும் அவர்கள் மனத்தில் ஒரு சுமை இல்லாமல் இருக்குமானால் அல்லது அவர்கள் எதிர் காலத்தைப் பற்றி மனக் கோட்டைகள் கட்டாமல் இருப்பார்களானால் அப்படிப் பட்டவர்கள் எதிர் காலத்தில் தொலைந்துவிட வில்லை என்று பொருள்.

"பிக்குகளே, 'நிகழ் காலத்தில் அடித்துச் செல்லப் படுவது' என்றால் என்ன? எவர் ஒருவர் விழிப்புற்ற அவரைப் (புத்தர்) பற்றிப் படிக்கக் கற்கவில்லை என்றால், அல்லது அன்பு மற்றும் புரிந்து கொள்ளல் பற்றிய போதனைகளைத் (தம்மம்) தெரிந்து கொள்ளவில்லையென்றால், அல்லது சமத்துவத்துடனும், கடைப்பிடியோடும் வாழ்பரைப் பற்றித் (சங்கம்) தெரிந்து கொள்ளவில்லையென்றால், அவருக்கு மேன்மையான ஆசிரியர்கள் பற்றியும், அவர்களின் போதனைகளைப் பற்றியும் எதுவும் தெரியாவிட்டால், அப்போதனைகளைப் பயிலாவிட்டால், மேலும்,

'இந்த உடல் தான் நான். நான் என்பது இந்த உடல்.
இந்த நுகர்ச்சிகள் தான் நான். நான் என்பது இந்த நுகர்ச்சிகள்.
இந்த மனக்குறிப்புகள் தான் நான். நான் என்பது இந்த மனக்குறிப்புகள்.
இந்த எண்ணப்போக்குகள் தான் நான். நான் என்பது இந்த எண்ணப்போக்குகள்.
இந்த அறிநிலை தான் நான். நான் என்பது இந்த அறிநிலை,'

என்று நினைப்பாரானால் அவர் நிகழ் காலத்தில் அடித்துச் செல்லப்படுபவர் என்று பொருள்.

"பிக்குகளே, 'நிகழ் காலத்தில் அடித்துச் செல்லப் படாமல் இருப்பது' என்றால் என்ன?

எவர் ஒருவர் விழிப்புற்ற அவரைப் (புத்தர்) பற்றியும் அன்பு மற்றும் புரிந்து கொள்ளல் பற்றிய போதனைகளையும் (தம்மம்) சமத்துவத்துடனும் கடைப்பிடியோடும் வாழ்பரைப் பற்றியும் (சங்கம்) படித்துக் கற்றுக் கொள்கிறாரோ, அவருக்கு மேன்மையான ஆசிரியர்கள் பற்றியும் அவர்களின் போதனைகளைப் பற்றியும் தெரிந்திருந்து, அப்போதனைகளின்படி பயில்கிறாரோ, மேலும்,

'இந்த உடல் தான் நான். நான் என்பது இந்த உடல்.
இந்த நுகர்ச்சிகள் தான் நான். நான் என்பது இந்த நுகர்ச்சிகள்.
இந்த மனக்குறிப்புகள் தான் நான். நான் என்பது இந்த மனக்குறிப்புகள்.
இந்த எண்ணப்போக்குகள் தான் நான். நான் என்பது இந்த எண்ணப் போக்குகள்.
இந்த அறிநிலை தான் நான். நான் என்பது இந்த அறிநிலை,'

என்று நினைக்கவில்லையோ அவர் நிகழ் காலத்தில் அடித்துச் செல்லப்படாமல் இருக்கின்றார் என்று பொருள்.

"பிக்குகளே, 'தனித்து வாழச் சிறந்த வழி' என்றால் என்னவென்பதைச் சுருக்கமாகவும் பின் விளக்கமாகவும் கூறியுள்ளேன்."

இவ்வாறு பகவர் போதித்தார். பிக்குகள் மகிழ்ந்தனர். அவர் போதனைப்படி நடைமுறையில் அவற்றைப் பயின்றனர்.