Majjhima Nikāya 93

அஸ்ஸலாயன சுட்டா

அஸ்ஸலாயன உடன்

ஒரு முறை புத்தர் சாவத்தி நகருக்கருகே, ஜேதா வனத்தில், அனந்தபிண்டிகரின் விஹாரையில் தங்கியிருந்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். அச்சமயம் பல காரணங்களுக்காக வேவ்வேறு மாகாணங்களிலிருந்து வந்த ஐநூறு பிராமணர்கள் சாவத்தியில் தங்கியிருந்தனர். அவர்களுக்கு இப்படி ஒரு எண்ணம் எழுந்தது, "இந்தக் கௌதமர் என்ற தியானி நான்கு ஜாதியினருக்கும் மனத் தூய்மையின் அவசியத்தை வலியுறுத்துகிறார். இந்தக் கருத்தை மறுத்து அவரிடம் வாதிட யாரால் முடியும்?" அச்சமயத்தில் பிராமண மாணவனான அஸ்ஸலாயன சாவத்தியில் தங்கியிருந்தார். மழிக்கப்பட்ட தலையுடன் பதினாறு வயதான இளைஞர் அவர். அவர் மூன்று வேதங்களையும் நன்கு கற்றவர். மேலும் வேதங்களின் சொற்பொருள், சடங்கு, பேசும் முறை, சொல்லிலக்கணம், வரலாறு அனைத்தையும் நன்குதெரிந்தவர். அத்துடன் மொழி, இலக்கணம், பிரபஞ்சம் சார்ந்த படிப்பிலும், பெரிய மனிதரின் அடையாளங்களையும் தெரிந்தவர். எனவே சாவத்தியில் தங்கியிருக்கும் பிராமண மாணவன் அஸ்ஸலாயனவே தியானி கௌதமரின் கருத்தை மறுத்து அவரிடம் வாதிடத் தகுந்தவர் என்ற எண்ணம் பிராமணர்களுக்குத் தோன்றியது.

பிராமணர்கள் பிராமண மாணவனான அஸ்ஸலாயனவிடம் சென்று, "அஸ்ஸலாயன பண்டிதரே, இந்தத் தியானி கௌதமர் நான்கு ஜாதியினருக்கும் மனத் தூய்மையை வலியுறுத்து கிறார். இந்தக் கருத்தை மறுத்து அவரிடம் வாதிட நீர் வர வேண்டும்." என்றனர்.

இதை கேட்டவுடன் பிராமண மாணவன் அஸ்ஸலாயன பிராமணர்களிடம் சொன்னார், " பிராமணர்களே, தியானி கௌதமர் வாய்மையைப் போதிப்பவர் . வாய்மையைப் போதிப்பவரிடம் வாதிடுவது கடினம். அவரது கருத்தை மறுத்து என்னால் வாதிட முடியாது."

மீண்டும் மீண்டும் பிராமணர்கள் பிராமண மாணவனான அஸ்ஸலாயனவை வற்புறுத்தினார்கள், "பண்டிதர் அஸ்ஸலாயன , இந்தத் தியானி கௌதமர் நான்கு ஜாதியினருக்கும் மனத் தூய்மையை வலியுறுத்துகிறார். இந்தக் கருத்தை மறுத்து அவரிடம் வாதிட நீர் வர வேண்டும். ஏனெனில், துறவு வாழ்க்கையை மேற்கொண்டுள்ள நீர் போரில் தோல்வியடையாமல் தோற்கடிக்கபட்டதாக எண்ண வேண்டாம்."

இதை கேட்டவுடன் பிராமண மாணவன் அஸ்ஸலாயன பிராமணர்களிடம் சொன்னார், " பிராமணர்களே, நான் வாதிட மறுத்தும் என்னை விடமாட்டீர்கள் போல இருக்கிறது. நீங்கள் கட்டளையிடுவதால் நான் செல்கிறேன்."

பிராமண மாணவன் அஸ்ஸலாயன பல பிராமணர்களுடன் புத்தரிடம் சென்றார். பிறகு அவரிடம் வாழ்த்து பரிமாற்றஞ் செய்து கொண்டார்.

இருவரும் நலம் விசாரித்த பின் அஸ்ஸலாயன ஒருபுறமாக உட்கார்ந்தார். புத்தரிடம் அவர் சொன்னார்: "கௌதமரே, பிராமணர்கள், 'பிராமணர் தான் உயர்ந்த ஜாதி, மற்ற ஜாதியினர் தாழ்ந்தவர். பிராமணர் மட்டுமே சிவந்தவர்; மற்ற ஜாதியினர் எல்லாம் கருத்தவர். பிராமணர் மட்டுமே தூய்மையானோர். மற்றவர் அப்படி அல்ல. பிராமணர் மட்டுமே பிரமனின் புதல்வர், அவரின் வாய் மூலமாக பிறந்தவர், பிரமனால் பிறந்தவர், பிரமனால் உருவாக்கப்பட்டவர், பிரமனின் வாரிசு' என்று சொல்கின்றனர் . அதைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?"

"அஸ்ஸலாயன , 'பிராமண பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதும், அவர்கள் கருவுறுவதும் பிரசவிப்பதும், குழந்தைக்குப் பாலூட்டிப் பேணுவதும் தெளிவாகத் தெரிகிறது. அப்படியிருக்க, பிறப்புக் கால்வாயிலிருந்து பிறந்த பிராமணர்கள் ' 'பிராமணர் தான் உயர்ந்த ஜாதி, மற்ற ஜாதியினர் தாழ்ந்தவர். பிராமணர் மட்டுமே சிவந்தவர்; மற்ற ஜாதியினர் எல்லாம் கருத்தவர். பிராமணர் மட்டுமே தூய்மையானோர். மற்றவர் அப்படி அல்ல. பிராமணர் மட்டுமே பிரமனின் புதல்வர், அவரின் வாய் மூலமாக பிறந்தவர், பிரமனால் பிறந்தவர், பிரமனால் உருவாக்கப்பட்டவர், பிரமனின் வாரிசு' என்று எப்படிக் கூறுகின்றனர்?" (அதாவது, பெண்ணின் வயிற்றிலிருந்து பிறந்தவர், பிரமனின் வாயிலிருந்து பிறந்ததாக கூறுகின்றனரே?, என்று கேட்கிறார் புத்தர்)

கௌத்தமர் அப்படி விளக்கிச் சொல்லியும் பிராமணர்கள் 'பிராமணர் தான் உயர்ந்த ஜாதி ... பிராமணர் மட்டுமே பிரமனின் புதல்வர், அவரின் வாய் மூலமாக பிறந்தவர், பிரமனால் பிறந்தவர், பிரமனால் உருவாக்கப்பட்டவர், பிரமனின் வாரிசு' என்றே எண்ணுகின்றனர்.

"யான, கம்போஜ மற்றும் இதர வெளி நாடுகளில் இரண்டே ஜாதிகள் தான் இருக்கின்றன - எஜமானும் அடிமையும். மேலும், எஜமானான ஒருவன் ஒரு நாள் அடிமையாகலாம். அடிமையான ஒருவன் ஒரு நாள் எஜமானாகலாம் என்பதைக் கேள்வி பட்டிருக்கிறாயா? இதைப்பற்றி நீ என்ன நினைக்கின்றாய், அஸ்ஸலாயன? "

"கேள்வி பட்டிருக்கிறேன், ஐயா..."

"அப்படியானால் உன் கருத்தில் என்ன வலிமை இருக்கிறது, அஸ்ஸலாயன?. எப்படிப் பிராமணர்கள், 'பிராமணர் தான் உயர்ந்த ஜாதி ... பிராமணர் மட்டுமே பிரமனின் புதல்வர், அவரின் வாய் மூலமாக பிறந்தவர், பிரமனால் பிறந்தவர், பிரமனால் உருவாக்கப்பட்டவர், பிரமனின் வாரிசு' என்று உறுதியாகச் சொல்ல முடியும்?"

கௌதமர் அப்படி சொல்லியும் பிராமணர் 'பிராமணர் தான் உயர்ந்த ஜாதி ... பிராமணர் மட்டுமே பிரமனின் புதல்வர், அவரின் வாய் மூலமாக பிறந்தவர், பிரமனால் பிறந்தவர், பிரமனால் உருவாக்கப்பட்டவர், பிரமனின் வாரிசு' என்றே நினைக்கின்றனர்.

"என்ன நினைக்கின்றாய், அஸ்ஸலாயன? க்ஷத்திரியன் (மேன்மையான வீரர் குலத்தில் பிறந்தவன், ராஜ குலத்தில் பிறந்தவன்) ஒருவன் - உயிரைக் கொன்று, திருடி, தவறான பாலியல் உறவுகள் கொண்டு, பிரித்துப் பேசி, கடினமாகப் பேசி, தேவையில்லாமல் பேசி, பேராசையுடன், நல்ல எண்ணம் இல்லாமல், தவறான கருத்துக்கள் கொண்டு -இருப்பானானால், அவன் உடல் சிதைந்த பின், அவன் மரணத்தின் பின் அவன் மட்டுமா மறு பிறப்பெடுக்கும் இடம் கீழ் லோகமாக இருக்கும், நரகமாக இருக்கும்? அதே போன்று நடந்து கொள்ளும் பிராமணன் கீழ் லோகத்தில் மறுபிறப் பெடுக்க மாட்டானா? வணிகருக்கு ... மட்டும் தான் அப்படி நடக்குமா? தொழிலாளி ஒருவன் - உயிரைக் கொன்று, திருடி, தவரான பாலியல் உறவுகள் கொண்டு, பிரித்துப் பேசி, கடினமாக பேசி, தேவையில்லாமல் பேசி, பேராசையுடன், நல்ல எண்ணம் இல்லாமல், தவரான கருத்துக்கள் கொண்டு - இருப்பானானால் அவன் மட்டும் தான் கீழ் லோகத்தில் மறு பிறப்பெடுப்பானா? அப்படி தவறாக நடந்துக்கொள்ளும் பிராமணனுக்கு அப்படி நடக்காதா?"

"இல்லை ஐயா கௌதமரே. க்ஷத்திரியனானாலும் சரி, பிராமணனானாலும் சரி, வணிகரானாலும் சரி, தொழிலாளியானாலும் சரி ... எல்லா ஜாதியினரும் - அவர்கள் உயிரைக் கொன்று, திருடி, தவரான பாலியல் உறவுகள் கொண்டு, பிரித்துப் பேசி, கடினமாக பேசி, தேவையில்லாமல் பேசி, பேராசையுடன், நல் எண்ணம் இல்லாமல், தவறான கருத்துக்கள் கொண்டு - நடந்து கொண்டால், அவர்கள் உடல் உடைந்த பின் அவர்கள் மரணத்தின் பின் அவர்கள் கீழ் லோகத்தில், நரகத்தில் தான் மறு பிறப்பெடுப்பார்கள்."

"அப்படியானால் உன் கருத்தில் என்ன வலிமை இருக்கிறது, அஸ்ஸலாயன?. எப்படி உறுதியாக பிராமணர்கள், 'பிராமணர் தான் உயர்ந்த ஜாதி ... பிராமணர் மட்டுமே பிரமனின் புதல்வர், அவரின் வாய் மூலமாக பிறந்தவர், பிரமனால் பிறந்தவர், பிரமனால் உருவாக்கப்பட்டவர், பிரமனின் வாரிசு' என்று சொல்கின்றனர்?"

கௌதமர் அப்படிச் சொல்லியும் பிராமணர் 'பிராமணர் தான் உயர்ந்த ஜாதி ... பிராமணர் மட்டுமே பிரமனின் புதல்வர், அவரின் வாய் மூலமாக பிறந்தவர், பிரமனால் பிறந்தவர், பிரமனால் உருவாக்கப்பட்டவர், பிரமனின் வாரிசு' என்றே நினைக்கின்றனர்.

"என்ன நினைக்கின்றாய், அஸ்ஸலாயன? உயிரைக் கொல்லுதலையும், திருடுவதையும் தவிர்க்கும் ஒருவன், தவறான பாலுறவுகளில் ஈடுபடாமல் இருக்கும் ஒருவன், பொய் பேசுவது, பிரித்துப் பேசுவது, கடுமையாகப் பேசுவது, தேவை இல்லாமல் பேசுவது போன்ற பேச்சைத் தவிர்க்கும் ஒருவன், பேராசையில்லாத ஒருவன், கெட்ட எண்ணம் இல்லாத ஒருவன், சரியான நோக்கம் கொண்டுள்ள ஒருவன் பிராமணனாக இருந்தால் மட்டும் தானா - தன் உடல் சிதைந்த பின், மரணத்தின் பின் நல்ல உலகில் அதாவது சுவர்க்கத்திலோ மேல் லோகத்திலோ மறு பிறப்பெடுப்பான்? க்ஷத்திரியனோ, வணிகனோ, தொழிலாளியோ அப்படிப் பண்போடு நடந்துக்கொண்டால் அவர்கள் மேல் லோகங்களில் மறு பிறப்பெடுக்க மாட்டார்களா என்ன?"

"இல்லை கௌதமரே. க்ஷத்திரியனும், .. பிராமணனும்,.. வர்த்தனும், தொழிலாளியும் ... நான்கு ஜாதியின் உறுப்பினர்களும் - அவர்கள் உயிர் கொல்லுதலைத் தவிர்த்தால், திருடுவதைத் தவிர்த்தால், தவறான பாலுறவுகளில் ஈடுபடாமல் இருந்தால், பொய் பேவது, பிரித்துப் பேசுவது, கடுமையாகப் பேசுவது, தேவை இல்லாமல் பேசுவது போன்ற பேச்சைத் தவிர்த்தால், பேராசையும் கெட்ட எண்ணமும் இல்லாமல் இருந்தால், சரியான நோக்கத்தோடு இருந்தால் - அவர்களும் தங்கள் உடல் சிதைந்த பின், மரணத்தின் பின் நல்ல உலகில் அதாவது சுவர்க்கத்தில் மறுபிறப் பெடுப்பார்கள்."

"அப்படியானால் உன் கருத்தில் என்ன வலிமை இருக்கிறது, அஸ்ஸலாயன?. எப்படி உறுதியாகப் பிராமணர்கள், 'பிராமணர் தான் உயர்ந்த ஜாதி ... பிராமணர் மட்டுமே பிரமனின் புதல்வர், அவரின் வாய் மூலமாக பிறந்தவர், பிரமனால் பிறந்தவர், பிரமனால் உருவாக்கப்பட்டவர், பிரமனின் வாரிசு' என்று சொல்கின்றனர்?"

கௌதமர் அப்படிச் சொல்லியும் பிராமணர் 'பிராமணர் தான் உயர்ந்த ஜாதி ... பிராமணர் மட்டுமே பிரமனின் புதல்வர், அவரின் வாய் மூலமாக பிறந்தவர், பிரமனால் பிறந்தவர், பிரமனால் உருவாக்கப்பட்டவர், பிரமனின் வாரிசு' என்றே நினைக்கின்றனர்.

"என்ன நினைக்கின்றாய், அஸ்ஸலாயன? வெறுப்பிலாமல், கெட்ட எண்ணம் இல்லாமல் - தங்கள் உள்ளங்களை மேம்படுத்தப் பிராமணனால் மட்டும் தான் முடியுமா? ஒரு க்ஷத்திரியனாலோ, வணிகனாலோ, தொழிலாளியினாலோ அப்படி இருக்க முடியாதா என்ன?"

"இல்லை கௌதமரே. க்ஷத்திரியனும், .. பிராமணனும்,.. வணிகனும், தொழிலாளியும் ... நான்கு ஜாதியின் உருப்பினர்களும் - வெறுப்பிலாமல், கெட்ட எண்ணம் இல்லாமல் - அவர்கள உள்ளத்தின் மேன்மையை வளர்க்க முடியும்."

"அப்படியானால் உன் கருத்தில் என்ன வலிமை இருக்கிறது, அஸ்ஸலாயன?. எப்படி உறுதியாக பிராமணர்கள், 'பிராமணர் தான் உயர்ந்த ஜாதி ... பிராமணர் மட்டுமே பிரமனின் புதல்வர், அவரின் வாய் மூலமாக பிறந்தவர், பிரமனால் பிறந்தவர், பிரமனால் உருவாக்கப்பட்டவர், பிரமனின் வாரிசு' என்று சொல்கின்றனர்?"

கௌதமர் அப்படிச் சொல்லியும் பிராமணர் 'பிராமணர் தான் உயர்ந்த ஜாதி ... பிராமணர் மட்டுமே பிரமனின் புதல்வர், அவரின் வாய் மூலமாக பிறந்தவர், பிரமனால் பிறந்தவர், பிரமனால் உருவாக்கப்பட்டவர், பிரமனின் வாரிசு' என்றே நினைக்கின்றனர்.

"என்ன நினைக்கின்றாய், அஸ்ஸலாயன? சோப்பையும் கடற் பஞ்சையும் (உடலைத் தேய்க்க உதவும் பொருள்) ஆற்றுக்கு எடுத்துச் சென்று உடலிலுள்ள அழுக்கையும் புழுதியையும் தேய்த்துச் சுத்தம் செய்யப் பிராமணரால் மட்டும் தான் முடியுமா? க்ஷத்திரியனாலோ, வணிகனாலோ, தொழிலாளியினாலோ முடியாதா என்ன?."

"இல்லை கௌதமரே. க்ஷத்திரியனும், .. பிராமணனும்,.. வணிகனும், தொழிலாளியும் ... நான்கு ஜாதியின் உறுப்பினர்களும் - அவர்கள் சோப்பையும் கடற் பஞ்சையும் பயன் படுத்தி அழுக்கையும் புழுதியையும் நீக்கி உடலைச் சுத்தம் செய்ய முடியும்.."

"அப்படியானால் உன் கருத்தில் என்ன வலிமை இருக்கிறது, அஸ்ஸலாயன?. எப்படி உறுதியாக பிராமணர்கள், 'பிராமணர் தான் உயர்ந்த ஜாதி ... பிராமணர் மட்டுமே பிரமனின் புதல்வர், அவரின் வாய் மூலமாக பிறந்தவர், பிரமனால் பிறந்தவர், பிரமனால் உருவாக்கப்பட்டவர், பிரமனின் வாரிசு' என்று சொல்கின்றனர்?"

கௌதமர் அப்படிச் சொல்லியும் பிராமணர் 'பிராமணர் தான் உயர்ந்த ஜாதி ... பிராமணர் மட்டுமே பிரமனின் புதல்வர், அவரின் வாய் மூலமாக பிறந்தவர், பிரமனால் பிறந்தவர், பிரமனால் உருவாக்கப்பட்டவர், பிரமனின் வாரிசு' என்றே நினைக்கின்றனர்.

"என்ன நினைக்கின்றாய், அஸ்ஸலாயன? இப்படி ஒரு சம்பவம் நிகழ்வதாக வைத்துக்கொள்வோம். ஒரு முடிசூடப்பட்ட க்ஷத்திரிய மன்னன் வெவ்வேறு பிறப்புள்ள ஒரு நூறு பேரை அழைத்து (அவர்களிடம்)

' வாருங்கள்! ராஜ குடும்பங்களிலிருந்தும், பிராமண குடும்பங்களிலிருந்தும் பிறந்தவர்களே: சால மரத்தின் அல்லது சந்தின மரத்தின் அல்லது பதுமக மரத்தின் தீக் கட்டை ஒன்றை எடுத்து அதன் மூலம் தீ யையும் சூட்டையும் உருவாக்குங்கள். சாதியினின்று நீக்கப்பட்டவர்களே, பொறி வைத்துப் பிடிக்கும் குலத்தவரே, கூடை செய்யும் குலத்தவரே, குப்பை எடுக்கும் குலத்தவரே, வண்டிசெய்து அதனைப் பழுது பார்க்கும் குலத்தவரே: நாய் தண்ணீர் குடிக்கும் பாத்திரத்திலிருந்தோ, பன்றி வாழும் குழியிலிருந்தோ, குப்பைத் தொட்டியிலிருந்தோ ஒரு கட்டையை எடுத்து அல்லது ஆமணக்கு (விளக்கெண்ணை எடுக்கப் பயன்படும் மரம்) மரக் கட்டையை எடுத்து அதன் மூலம் தீ யையும் சூட்டையும் உருவாக்குங்கள். ' என்று கூறுகிறார்.

'என்ன நினைக்கின்றாய், அஸ்ஸலாயன? பிராமண குலத்தாரும், க்ஷத்திரிய குலத்தாரும் உருவாக்கிய தீக்கு மட்டும் தான் சுடரும், நிறமும், பிரகாசமும் இருக்குமா? அந்த தீ மட்டும் தான் தீ செய்யக்கூடிய காரியங்களை செய்ய முடியுமா? மற்றவர் செய்த தீக்கு சுடரும், நிறமும், பிரகாசமும் இருக்காதா? அல்லது அவர்கள் உருவாக்கிய தீ யினால் தீ செய்யக் கூடிய செயல்களைச் செய்ய முடியாதா?"

"இல்லை கௌதமரே. பிராமண குலத்தாரும், க்ஷத்திரிய குலத்தாரும் அரச குலத்தாரும் உருவாக்கிய தீக்குச் சுடரும், நிறமும், பிரகாசமும் இருக்கும். தீ செய்யக்கூடிய காரியங்களும் செய்ய முடியும். சாதியினின்று நீக்கப்பட்டவர், பொறிவைத்துப் பிடிக்கும் குலத்தவர், கூடை செய்யும் குலத்தவர், குப்பை எடுக்கும் குலத்தவர், வண்டிசெய்து அதனைப் பழுது பார்கும் குலத்தவர் உருவாக்கிய தீக்கும் சுடரும், நிறமும், பிரகாசமும் இருக்கும். தீ செய்யக்கூடிய காரியங்களையும் செய்ய முடியும். ஏன் என்றால் எல்லாத் தீயும் சுடருடையது, நிறமுடையது, பிரகாசமுடையது. தீ செய்யக்கூடியவற்றை எல்லாத் தீயும் செய்ய முடியும்."

"அப்படியானால் உன் கருத்தில் என்ன வலிமை இருக்கிறது, அஸ்ஸலாயன?. எப்படி உறுதியாகப் பிராமணர்கள், 'பிராமணர் தான் உயர்ந்த ஜாதி ... பிராமணர் மட்டுமே பிரமனின் புதல்வர், அவரின் வாய் மூலமாக பிறந்தவர், பிரமனால் பிறந்தவர், பிரமனால் உருவாக்கப்பட்டவர், பிரமனின் வாரிசு' என்று சொல்கின்றனர்?"

கௌதமர் அப்படிச் சொல்லியும் பிராமணர் 'பிராமணர் தான் உயர்ந்த ஜாதி ... பிராமணர் மட்டுமே பிரமனின் புதல்வர், அவரின் வாய் மூலமாக பிறந்தவர், பிரமனால் பிறந்தவர், பிரமனால் உருவாக்கப்பட்டவர், பிரமனின் வாரிசு' என்றே நினைக்கின்றனர்.

'என்ன நினைக்கின்றாய், அஸ்ஸலாயன? ஒரு க்ஷத்திரிய வாலிபன் ஒரு பிராமணப் பெண்ணோடு சேர்ந்து வாழ்வதாக வைத்துக்கொள்வோம். அதனால் அவர்களுக்கு ஒரு மகன் பிறக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அந்த மகன் தந்தையைப் போலவும் தாயைப் போலவும் இருப்பானா? அவனை க்ஷத்திரியன் என்றும் பிராமணன் என்றும் கூறலாமா?

"ஆம், கௌதமரே.

'என்ன நினைக்கின்றாய், அஸ்ஸலாயன? ஒரு பிராமண வாலிபன் ஒரு க்ஷத்திரியப் பெண்ணோடு சேர்ந்து வாழ்வதாக வைத்துக்கொள்வோம். அதனால் அவர்களுக்கு ஒரு மகன் பிறக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அந்த மகன் தந்தையைப் போலவும் தாயைப் போலவும் இருப்பானா? அவனை க்ஷத்திரியன் என்றும் பிராமணன் என்றும் கூறலாமா?

"ஆம், கௌதமரே.

"என்ன நினைக்கின்றாய், அஸ்ஸலாயன? ஒரு பெண் குதிரையும் கழுதையும் சேரும் போது அதனால் ஒரு சந்ததி பிறக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதனை தந்தையைப் போலவும் தாயைப் போலவும் இருக்கும் என்று சொல்ல முடியுமா? அதனை குதிரையென்றும் கழுதை என்றும் கூறமுடியுமா?"

"கௌதமரே, அப்படிக் கலப்புச் சேர்க்கையினால் உருவாகும் சந்ததியைக் கோவேறு கழுதை என்று தான் கூறலாம். கழுதையென்றோ குதிரையென்றோ கூறமுடியாது. மேற்கூறிய இரண்டு உதாரணங்களில் பிறக்கும் குழந்தைக்கும் அதனது தாய் தந்தைக்கும் வேறுபாடு இல்லை. ஆனால் இந்த உதாரணத்தில் வேறுபாடு உள்ளது.

"என்ன நினைக்கின்றாய், அஸ்ஸலாயன? இரண்டு பிராமண மாணவர்கள் இருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். இருவரும் ஒரே தாய்க்குப் பிறந்த சகோதரர்கள். ஒருவன் படித்தவன். மேலும் மந்திரங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டவன். மற்றவனுக்கு படிப்பும் இல்லை மந்திரங்களும் தெரியாது. ஒரு மரண வீட்டு விருந்திலோ, பால் சோறு தரும் நன்கொடை உபசரிப்பிலோ, உயிர்ப் பலி கொடுக்கப்பட்ட கிடா விருந்திலோ, திருவிழா விருந்திலோ பிராமணர்கள் யாருக்கு முதலில் உபசரிப்புத் தருவார்கள்?"

"படித்த மந்திரங்கள் தெரிந்த மாணவனுக்குத்தான் கௌதமரே... படிக்காத, மந்திரம் தெரியாதவனை உபசரிப்பதில் என்ன பலன் இருக்கிறது?"

"என்ன நினைக்கின்றாய், அஸ்ஸலாயன? இரண்டு பிராமண மாணவர்கள் இருக்கின்றார்கள் என்று எடுத்துக் கொள்வோம். இருவரும் ஒரே தாய்க்குப் பிறந்த சகோதரர்கள். ஒருவன் படித்தவன். மேலும் மந்திரங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டவன். ஆனால் ஒழுக்கம் கெட்டவன். கேடுள்ளவன். மற்றவனுக்குப் படிப்பும் இல்லை மந்திரங்களும் தெரியாது. ஆனால் பண்புள்ளவன். நல்லவன். ஒரு மரண வீட்டு விருந்திலோ, பால் சோறு தரும் நன்கொடை உபசரிப்பிலோ, உயிர்ப் பலி கொடுக்கப்பட்ட மாமிச விருந்திலோ, திரு விழா விருந்திலோ பிராமணர்கள் யாருக்கு முதலில் உபசரிப்புத் தருவார்கள்?"

"படிக்காத மந்திரங்களும் தெரியாத, ஆனால் பண்புள்ள நல்லவனுக்குத்தான் கௌதமரே... ஒழுக்கக் கேடுள்ளவனை உபசரிப்பதில் என்ன பலன் இருக்கிறது?"

"அஸ்ஸலாயன முதலில், பிறப்பிலிருந்துதான் தூய்மை வருவதாகக் கூறினாய். பின் மந்திரம் தெரிந்தால் தான் தூய்மை என்று கூறினாய். பின் இரண்டையும் ஒதுக்கி விட்டுப் பண்பு தான் சரி என்கிறாய். அது தானே நான்கு ஜாதியினருக்கும் நான் போதிக்கும் தூய்மை?"

இதை கேட்ட பிராமண மாணவன் அஸ்ஸலாயன அமைதியாக இருந்தார். மனக்குழப்பத்துடன், தோள்கள் தாழ்ந்து, தலை கவிழ்ந்து, எதோ யோசனையில் இருந்தவாறு என்ன சொல்வதென்று தெரியாமல் இருந்தார்.

அதைப் பார்த்த கௌதமர் அவனிடம் சொன்னார் . "ஒரு முறை அஸ்ஸலாயன , இந்தத் தீய கருத்து காட்டில் ஓலைக் குடிசைகளில் வாழும் ஏழு பிராமண சந்நியாசிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டபோது எழுந்தது: 'பிராமணர் தான் உயர்ந்த ஜாதி, மற்ற ஜாதியினர் தாழ்ந்தவர். பிராமணர் மட்டுமே சிவந்தவர்; மற்ற ஜாதியினர் எல்லாம் கருத்தவர். பிராமணர் மட்டுமே தூய்மையானோர். மற்றவர் அப்படி அல்ல. பிராமணர் மட்டுமே பிரமனின் புதல்வர், அவரின் வாய் மூலமாகப் பிறந்தவர், பிரமனால் பிறந்தவர், பிரமனால் உருவாக்கப்பட்டவர், பிரமனின் வாரிசு.' அப்போது கருநிறமேனி உள்ள தேவாலா என்ற முனிவர் இதைக் கேட்டு 'இந்தக் கொடிய கருத்து இந்த ஏழு பிராமணர்கள் மத்தியில் எழுந்துள்ளது.' என்று நினைத்தார். அவர் தன் தலை முடியையும் தாடியையும் ஒழுங்கு செய்து , கால் அணிகள் அணிந்து , தங்கத்தால் செய்யப்பட்ட ஊன்றுகோலையும் எடுத்துக் கொண்டு அந்த ஏழு பிராமணர்கள் வாழும் குடிசையின் வாசலில் தோன்றி முன்னும் பின்னும் நடந்து கொண்டே தனக்குத்தானே 'அந்த பிராமண சந்நியாசிகள் எங்கே போனார்கள்? அந்த பிராமண சந்நியாசிகள் எங்கே போனார்கள்? ' என்று பேசிக்கொண்டார் ."

அந்த ஏழு பிராமண சந்நியாசிகள் கருநிறமேனி உள்ள தேவாலாவை நோக்கிச் சொன்னார்கள். 'யார் அங்கே கிராமத்துச் சோம்பேறியைப் போல வாசலில் மேலும் கீழும் நடந்து கொண்டு ' 'அந்தப் பிராமண சந்நியாசிகள் எங்கே போனார்கள்? அந்தப் பிராமண சந்நியாசிகள் எங்கே போனார்கள்? ' என்று சொல்வது? அவனுக்குச் சாபம் கொடுப்போம்!" அந்த ஏழு பிராமணர்களும் கருநிறமேனி உள்ள தேவாலாவைப் பார்த்து "சாம்பலாகப் போக, தீயவனே! சாம்பலாகப் போக, தீயவனே! சாம்பலாகப் போக, தீயவனே!" என்று சாபமிட்டார்கள். ஆனால் சாபம் போடப் போடத் தேவலா மேலும் மேலும் அழகும் பொலிவும் பெற்றார். அப்போது அந்த பிராமணர்கள் நினைத்தார்கள், 'சந்நியாசியாக இருப்பது வீணாகிப் போச்சே! பரிசுத்த வாழ்க்கை பயனற்றது! ஏனெனில் முன் ஒருவனைப் பார்த்து 'சாம்பலாகப் போக, தீயவனே!' என்று நாம் சாபமிட்டால் உடனே சாம்பலாகி விடுவான். ஆனால் இப்போது பலிக்கவில்லையே. மேலும் அல்லவா அழகும் பொலிவும் பெறுகிறான்!'

" ' சந்நியாசிகளே உங்கள் சந்நியாச வாழ்வும், பரிசுத்த வாழ்வும் வீண் போகவில்லை. தயவு செய்து என்மீதான உங்கள் வெறுப்பைக் கைவிடுங்கள்' என்றார் கருநிறம் கொண்ட தேவலா"

"உங்கள் மீதான வெறுப்பைக் கை விடுகிறோம். யார் நீர்?"

"கருநிறமேனி உள்ள தேவாலா என்ற முனிவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கின்றீர்களா?"

"ஆம், ஐயா."

"அது நான் தான்."

"அதைக் கேட்ட எழு பிராமணர்களும் அவர் அருகே வந்து வணங்கினார்கள். அவர் சொன்னார், 'இந்தத் தீய கருத்து காட்டில் ஓலைக் குடிசைகளில் வாழும் ஏழு பிராமண சந்நியாசிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டபோது எழுந்ததாகக் கேள்விப் பட்டேன்: 'பிராமணர் தான் உயர்ந்த ஜாதி, மற்ற ஜாதியினர் தாழ்ந்தவர். பிராமணர் மட்டுமே சிவந்தவர்; மற்ற ஜாதியினர் எல்லாம் கருத்தவர். பிராமணர் மட்டுமே தூய்மையானோர். மற்றவர் அப்படி அல்ல. பிராமணர் மட்டுமே பிரமனின் புதல்வர், அவரின் வாய் மூலமாகப் பிறந்தவர், பிரமனால் பிறந்தவர், பிரமனால் உருவாக்கப்பட்டவர், பிரமனின் வாரிசு.' "

"அது சரிதான், ஐயா."

"உங்களை பெற்ற தாய் ஒரு பிராமணனுடன் தான் கூடினால் என்றும் பிராமணன் அல்லாதவருடன் கூடவில்லை என்று உங்களுக்குத் தெரியுமா சந்நியாசிகளே? "

"தெரியாது, ஐயா."

"உங்களைப் பெற்ற தாயின் தாய்மார்கள் - ஏழு தலைமுறை முன் இருந்த தாய்மார்கள் - பிராமணருடன் மட்டும் தான் வாழ்நதார் என்று தெரியுமா? பிராமணன் அல்லாதவருடன் வாழவில்லை என்று உறுதி கூற முடியுமா? "

"தெரியாது, ஐயா."

"உங்களுக்குத் தெரியுமா சந்நியாசிகளே உங்கள் தந்தை ஒரு பிராமணப் பெண்ணுடன் தான் உறவு கொண்டார் என்றும் பிராமணர் அல்லாத பெண்ணுடன் உறவு கொள்ளவில்லை என்றும் தெரியுமா?"

"தெரியாது, ஐயா."

"உங்கள் தந்தையின் தந்தைமார்கள் - ஏழு தலைமுறை முன் இருந்த தந்தையர் - பிராமணப் பெண்ணுடன் தான் வாழ்நதார் என்று தெரியுமா? பிராமணர் அல்லாத பெண்களுடன் வாழவில்லை என்று தெரியுமா? "

"தெரியாது, ஐயா."

"உங்களுக்குக் கரு எப்படி உருவாகிறது என்று தெரியுமா?"

"கரு எப்படி உருவாகிறது என்று தெரியும் ஐயா. தாயும் தந்தையும் சேரும் போது, தாய் கர்ப்பங்கொள்ளும் நிலையில் இருக்கும்போது, ஒரு கந்தப்ப (மறு பிறவி எடுக்க இருக்கும் பிராணி) அருகில் இருக்க வேண்டும். மூன்றும் சேரும் போது கரு உருவாகிறது." (இந்தக் கருத்து அன்றைய பிராமணர்கள் மத்தியில் நிலவிய, ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. )

"ஆனால் அந்தக் கந்தப்ப ஒரு க்ஷத்திரியனா, பிராமணனா, வணிகனா அல்லது தொழிலாளியா என்று உறுதியாகத் தெரியுமா?"

"தெரியாது, ஐயா."

"அப்படி இருக்கும் போது, நீங்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?"

"அப்படி இருக்கும் போது, நாங்கள் யார் என்று தெரியாது, ஐயா."

"அஸ்ஸலாயன அந்த ஏழு பிராமண முனிவர்களால் அவர்கள் பிறப்புக் கருத்தைப் பற்றிக் கருநிறம் கொண்ட தேவலா கேள்வி கேட்ட போது பதில் கூற முடியவில்லை. இப்போது நான் கேட்கும் கேள்விகளுக்கு உன் பிறப்புக் கருத்துடன் நீ எப்படி வாதிடப் போகிறாய்? நீ அந்தப் பிராமண முனிவர்களின் வாரிசு தானே? உன் ஆசிரியர்கள் மூலம் ஒரு கரண்டி அளவு கூட கற்கவில்லையா?

கௌதமர் இதைச் சொன்ன உடன் பிராமண மாணவன் அஸ்ஸலாயன புத்தரிடம் சொன்னார்: "அருமை ஐயா கௌதமரே! அருமை! குப்புற விழுந்ததை நேர் செய்தது போல, மறைந்ததைத் தெளிவாக்குவது போல, தொலைந்து போன ஒருவனுக்கு வழி காட்டுவது போல, இருட்டான இடத்திற்கு விளக்குக் கொண்டு செல்வதனால் கண்கள் உருவங்களைக் காண முடிவது போல, ஐயா கௌதமரும் - பல தெளிந்த நியாயமான விளக்கங்களோடு தர்மத்தைத் தெளிவாக்கி யுள்ளீர்கள். ஐயா கௌதமரிடம் நான் அடைக்கலம் செல்கின்றேன். தர்மத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். சங்கத்திடம் அடைக்கலம் செல்கின்றேன். இன்றிலிருந்து என் வாழ்நாள் முடியும் வரை கௌதமர் என்னை அவரிடம் அடைக்கலம் சென்ற இல்லற சீடராக நினைவில் கொள்வாராக."