சுத்த நிபாதம் 4.1

காம சூத்திரம்: புலன் இன்பங்கள்

புலன் இன்பங்களுக்கு ஏங்கும் ஒருவர்,
அதை அடைந்து விட்டால், ஆம்,
அவர் உள்ளம் குதூகலப்படுகிறது.
அந்த மானிடன் விரும்பியதைப் பெறுகிறான்.
ஆனால் அவன்
—ஏங்கும், ஆசைப்படும்—
இன்பங்கள் குன்றினால்,
அவன் உள்ளம் நொறுக்கப் படுகிறது,
அம்பினால் துளைக்கப் பட்டது போல.

புலன் இன்பங்களைத் தவிர்க்கும் ஒருவர்
—தன் காலால் பாம்பின்
தலையை மிதிக்காமல் இருப்பது போல—
கடைப்பிடியோடு,
உலகப் பற்றுக்கு
அப்பால் செல்கிறான்.

வயல், மண், பொன்,
மந்தை, குதிரைகள்,
பணியாட்கள், அலுவலர்கள்,
பெண், உறவினர்,
பற்பல புலன் இன்பங்கள்—
இவற்றுக்குப் பேராசைப்படும் ஒருவன்
பலவீனத்தால் கீழ்ப்படுத்தப் படுகிறான்
பிரச்சனைகளால் நசுக்கப் படுகிறான்.
அவனைத் துன்பம் தாக்குகிறது
பிளவுபட்ட படகை நீர் தாக்குவது போல.

எனவே ஒருவர், எப்போதும் கடைப்பிடியோடு
புலன் சிற்றின்பங்களைத் தவிர்த்திட வேண்டும்.
அவற்றை விட்டுவிட்ட பின்
வெள்ளத்தைத் தாண்டி விடலாம்.

படகிலுள்ள நீரை வெளியேற்றியபின்
பாதுகாப்பாக அக்கரை சேர்வது போல.