சுத்த நிபாதம் 4.2
குஹத்தக்க சூத்திரம்—உடலின் குகை
குகை (உடல்) மீது பற்றுக் கொண்டு,
பெரிதும் மூடப்பட்டு,
குழப்பத்தில் முழுகியவன்
தனிமையிலிருந்து வெகு தொலைவில் இருக்கின்றான்—
ஏனென்றால் உலகில்
புலன் இன்பங்கள்
புலன் ஆசைகள்
ஆகியவற்றைக் கைவிடுவது என்பது அவ்வளவு எளிதல்ல.பேராசையினால் கட்டப் பட்டு,
பவத்தின் வயம் சிக்கியவர்
எளிதில் விடுபடுவதில்லை
ஏனெனெறால் விடுதலை என்பது
மற்றவர்களால் தரப்படுவதல்ல.முன்னும், பின்னும்
புலன் இன்பங்களின் மேல்
பசி கொண்டவர்கள்
இங்கேயும், இதற்கு முந்தையும்—
புலன் இன்பங்களுக்காகப்
ஆசைப் படுவோர்,
இதையும் அதையும் செய்தவராக, பேதமையோடு, உலோபியாக
சுருதி இல்லாத வழிகளில் பழக்கப்பட்ட
(உலகியலுக்கு மாறான வழியில்)
அவர்கள்—துன்பத்தில் சிக்கியவராக—புலம்புகின்றனர்:
“இங்கிருந்து சென்றபின் என்
கதி என்னவாகுமோ?”எனவே மானிடர் இங்கேயே இப்போதே
பயில வேண்டும்.
இந்த உலகில் சுருதி இல்லாத வழியில்
(உலக இயல்புக்கு மாறுபட்ட வழியில்—தீய வழியில்)
ஈடுபடுவதை அறிந்தபின்,
முன் செய்த காரணத்தால்
முறையற்ற வழியில் தொடர்ந்து
நடந்து கொள்ள வேண்டாம்.
அத்தகைய வாழ்வு குறுகியது
என்பது ஞானியின் வாக்கு.அவர்களைப் பார்க்கிறேன்.
இந்த உலகில், அலைக்கழிக்கப் பட்டவர்களாக,
தோற்றங்களுக்காக (இப்படி ஆக வேண்டும் அப்படி ஆக வேண்டும் என்ற)
வேட்கையில் மூழ்கிய மக்கள்.
அவர்கள் கீழான மனிதர்கள்.
மரணத்தின் வாயிலில்
மறுபிறப்பிற்கான வேட்கையிலிருந்து
தப்ப முடியாதவர்கள்.பாருங்கள் அவர்களை,
‘நான்’, ‘எனது’ என்ற எண்ணங்களோடு தத்தளிப்பதை,
நீர் வற்றிக் கொண்டிருக்கும் ஓர் ஓடையில்
தத்தளிக்கும் மீன்களைப்போல—
இதைக் கண்ட பின்
‘எனது’ என்று சொந்தம் கொண்டாடாமல்
தோற்றங்கள் மீது
பற்றுக் கொள்ளாமல்
இரு புறத்தும்
ஆசையை அடக்கி,
புலன் ஊற்றை அறிந்து
பேராசையில்லாமல் வாழுங்கள்.தன்னைத் தானே நிந்திக்குமாறு
எதையும் செய்யாத
மெய்ஞ்ஞானமுள்ள ஒருவர்
கண்டதை,
கேட்டதைப்
பற்றிக் கொள்வதில்லை.
மனக்குறிப்புகளை அறிந்தவராக
வெள்ளத்தைத் தாண்டி விடுகிறார்—
முனிவர் பொருட்களோடு
பற்றுக் கொள்வதில்லை.
பின் அம்பை நீக்கியவராக,
விவேகத்துடன் வாழும் அவர்
இம்மைக்கும் மறுமைக்கும்—
இரண்டுக்கும் ஏங்குவதில்லை.