சுத்த நிபாதம் 4.3

துத்தத்தக்க சூத்திரம்: மாசுபடிந்தவர்

மனிதர்களில் ஒரு சிலர் தீய நோக்கத்தோடு வாதிடுவர்,
வேறு சிலர் உண்மைக்காக வாதிடுவர்,
ஆனால் ஒரு முனிவரோ தோன்றும்
சர்ச்சைகள் எதிலும் தலையிடுவதில்லை,
அதனால அவர் எங்கும்
கட்டுப் படுத்தப் படுவதில்லை.

ஒருவர் தனது ஆசைகளினால்
அழைத்துச் செல்லப் படுபவர்
அதன்படி நடந்து கொள்பவர்,
தானாகவே முடிவெடுப்பவர்
தனது கருத்துகளுக்கு அப்பால்
அவர் எப்படிச் செல்வது?
தனக்குத் தெரிந்த வழியின்படியே
தொடர்ந்து வாதிடுவார்.

கேட்காமலே தனது
பயிற்சிகளைப் பற்றியும்,
ஒழுக்கங்களைப் பற்றியும்
தம்பட்டம் அடிப்பவர்களைச்
சான்றோர் இயற்கையிலேயே சாலாதார் (பெருமையில்லாதோர்) என்பர்
—அவர்கள் தாங்களாகவே
தங்களைப் பற்றிக் கூறிக் கொள்வார்கள்.

ஆனால் அமைதியான துறவி,
தன்னுள் முழுமையான
விடுதலை பெற்றவர்
தனது ஒழுக்கங்களைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்ளாதவர்
—“அப்படிப்பட்டவன் நான்” –
(என்று கூறாதவர்,
‘நான்’ என்ற கருத்தைச் சேர்க்காதவர்)
அவரைச் சான்றோர்
இயல்பிலேயே மேன்மையானவர் என்பர்—
உலகைப் பொருத்தவரை
அவருக்கு இறுமாப்பு இல்லை.

ஒருவர் பின்பற்றும் கோட்பாடுகள் தூய்மையற்றவையாக இருந்தால்—
அவை தனக்குச் சாதகமாக உருவாக்கப்பட்டவையானால், உண்டாக்கப்பட்டவையானால்,
முக்கியத்துவம் தரப்பட்டவையானால்—
அவர் நிலையற்ற அமைதியை
நம்பியிருக்கிறார்.

பல கோட்பாடுகளைக் கேட்டபின்
அவற்றோடு பற்றுக் கொள்வதனால்
அப்பற்றுகளுக்கு அப்பால் விலகிச்
செல்வது கடினம்.
அப்பற்றுகளின் காரணமாகவே ஒருவர்
(புதிதாகக்) கேட்ட கோட்பாட்டை
நிராகரிப்பதும், ஏற்றுக் கொள்வதும்
நிகழ்கிறது.

ஆனால் தூய்மையானவர்
இந்த உலகில் தோற்றத்தைப் (பவம்) பற்றியும், தோன்றாமை பற்றியும்
முன் அபிப்பிராயம் ஏதும் கொண்டிருப்பதில்லை.
அகம்பாவமும் மயக்கமும் கைவிட்டவர்
எதைக் கொண்டு (ஈடுபட) போவார்?
அவர் இதனோடு தொடர்பற்றவர்.

ஆனால் சம்பந்தப்பட்டவர்கள்
கோட்பாடு சம்பந்தமாக
விவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
ஆனால் எப்படி—எதை வைத்து—
ஈடுபாடு கொள்ளாதவரிடம்
விவாதிப்பது?
அவர் எதையும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை,
நிராகரிக்கவும் இல்லை.
அவரோ அனைத்தையும் இங்கேயே கைவிட்டு
விட்டவர்—ஒன்றுவிடாமல்.