சுத்த நிபாதம் 4.15
அட்டதண்ட சூத்திரம்: வன்செயல் பற்றி
புத்தர்:
வன்முறை பயத்தைத் தோற்றுவிக்கும்.
கலகங்களின் மத்தியில் உள்ள மக்களைப் பார்த்து நான் வருந்தினேன்.
அதனால் நான் பாதிக்கப் பட்டேன்.சிறிய குளத்தில் உள்ள மீன்களைப்போல
ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு, மக்கள் வலியால் புரண்டு நெளிவதைக் கண்டேன்.
இதை அறிந்தவுடன் என்னுள் நடுக்கம் உண்டானது.உலகம் முழுமையாகப் பயனற்றது.
ஒவ்வொரு பகுதியும் கொந்தளிப்பில் உள்ளது.
எனக்கென்று ஓர் இடம் தேடினேன்.
ஆனால் காலியாக உள்ள இடம் எங்கும் கிடைக்கவில்லை.எங்கு நோக்கினும் போட்டி இருப்பதைக் கண்டு, நான் வெறுப்புற்றேன்.
பின் கண்ணுக்குத் தெரியாத ஓர் அம்பு,
மக்களின் உள்ளத்தில் ஊடுருவி இருப்பதைக் கண்டேன்.இந்தத அம்பினால் பாதிக்கப்பட்ட ஒருவர் எல்லாத் திசைகளிலும் ஓடுகிறார் .
ஆனால் அதைப் பிடுங்கி எடுத்த பின் அவர் ஓடவும் இல்லை, கீழே விழவும் இல்லை.இப்போது பயிற்சி விதிகள் ஓதப்படுகின்றன:
உலகில் பற்றுள்ள எதனையும் பின் தொடர வேண்டாம்.
புலன் இன்பங்களை விவேகத்துடன் கண்டபின்,
நிப்பாண நிலைக்காகப் பயிற்சி செய்யுங்கள்.ஒரு துறவி உண்மையைப் பேச வேண்டும்,
கர்வப்படாமல், ஏமாற்றாமல் இருக்க வேண்டும்;
கோள்மொழி பேசுவதைத் தவிர்த்தும்,
கோபம் கொள்ளாமலும் இருக்க வேண்டும்.
பேராசையையும், பொருள் ஈட்டும் மனோபாவத்தையும் கைவிட வேண்டும்.தூங்கிவழிவதை, சுறுசுறுப்பற்ற நிலையை, சோம்பலை வெல்ல வேண்டும்.
அக்கறையற்று வாழக் கூடாது.
நிப்பாணமே நோக்கமாகக் கொண்டவர் அகந்தையுடையவராக இருக்கக் கூடாது.தவறான பேச்சில் மூழ்கிவிடக் கூடாது,
மேலும் அழகிய உருவங்கள் மீது காமம் கொள்ளக் கூடாது.
அகம்பாவத்தை அடக்கி,
அவசர புத்தியோடு நடந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.சென்றதை நினைத்து ஏங்கக் கூடாது.
புதியதைக் கண்டும் குதூகலப்படக் கூடாது.
தொலைந்ததை நினைத்து வருந்தக் கூடாது
வரப்போவதினிடமும் கட்டுப்படக் கூடாது.பேராசையை நான் ‘பெரும் வெள்ளம்’ என்கிறேன்.
காமத்தின் ஓட்டம் அந்தப் பெரும் வெள்ளத்திற்குச் சமம்,
காமப் பொருட்கள் இட்டுக்கட்டப்பட்ட கற்பனைகள் .
புலன் இன்பங்களைக் கடப்பதென்பது ‘கடப்பதற்குக் கடினமான சேற்று நிலம்’ போல.வாய்மை தவராதவராக,
முனிவர், பிராமணர், உயர்ந்த இடத்தில் நிற்கிறார்.
எதனோடும் பற்றற்றவரென்பதால்,
அவர் உண்மையிலேயே அமைதியானவர் எனப் போற்றப் படுகிறார்.அவர் விவேகமுள்ளவர்.
தெளிவான ஞானம் கொண்டவர்.
வாய்மையை அறிந்தவரென்பதால் அவர் கட்டில்லாதவர்.
சரியான வழியில் உலகை அறிந்த அவர்
எவர் மீதும் பொறாமைப் படுவதில்லை.புலன் சிற்றின்பங்களைத் தாண்டிச் செல்பவர்
—சிற்றின்பப் பற்றினைக் கைவிடுவது கடினமானது—
துயரமும் கவலையும் இல்லாதவர்.
தொடர்விருப்பங்களை நிறுத்திய அவர்
கட்டில்லாதவர்.போனதைப் போக விடுங்கள்.
எதிர்காலத்தில் எதனையும் எதிர்பார்க்க வேண்டாம்.
இடையில் எதனோடும் பற்றுக் கொள்ளாவிடின்
அமைதியுடன் வாழ்வீர்கள்.அருவம் (மனம்) உருவத்தில் (உடல்) விரும்பத்தக்கது ஏதும் காணாதவர்,
இல்லாததை நினைத்து ஏங்காதவர்
உலகில் எதனையும் இழப்பதில்லை.“இது என்னுடையது” அல்லது
“இது பிறருடையது”
என்ற என்ணம் இல்லாதவர்,
பொருட் சொந்தம் கொண்டாடாதவர்.
அவர் எதற்கும் வருந்துவதில்லை, எதையும்
“என்னுடையதில்லை” என்று நினைத்தவராக.கொடுமை, பேராசை, காமம் இல்லாதவர்
எங்கும் மன அமைதியுடையவர்:
அவரைப்பற்றி என்னிடம் கேட்கும் போது,
அசைக்க முடியாதவருக்கான ஆசீர்வாதம் இதுவே என்பேன்.பேராசை இல்லாதவர்,
விவேகம் உள்ளவர்,
கன்மம் சேர்க்காதவர்.
புதிய கன்மங்கள் உருவாவதைத் தவிர்ப்பவர்
அப்படிப்பட்டவர் எங்கும் பாதுகாப்பைக் காண்கிறார்.ஒரு முனிவர் தன்னை மற்றவரோடு சமம், தாழ்ந்தவர், மேன்மையானவர் என்று ஒப்பிடாதவர்.
அமைதியானவர், சுயநலமில்லாதவர்
அவர் எதையும் பற்றுவதுமில்லை, விடுவதுமில்லை.