சுத்த நிபாதம் 1.1

உரக சூத்திரம்: அறவை / பாம்பு

எவனொருவனால் தன் கோபத்தை
அது தோன்றியவுடனே கட்டுப்படுத்த முடிகிறதோ,
அவன் வேகமாகப் பரவும் பாம்பின் விஷத்தைத்
தக்க நேரத்தில் கட்டுப்படுத்தும் மாற்று மருந்தைப் போன்றவன்.
—அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறான், மறுமையையும் கைவிடுகிறான்,
அறவை தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

குளத்தில் நுழையும் போது தாமரைச் செடிகள் களைந்தெறியப் படுவதுபோல,
எவனொருவன் தன் காமத்தை முற்றிலும் துண்டித்து விடுகின்றானோ
—அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறான், மறுமையையும் கைவிடுகிறான்,
அறவை தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

எவனொருவன் தன் வேட்கையை,
அதன் கொடிய வேகமான ஓட்டத்தை வற்ற வைப்பதால், முற்றிலும் துண்டிக்கின்றானோ
—அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறான், மறுமையையும் கைவிடுகிறான்,
அறவை தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

எவனொருவன் தன் அகம்பாவத்தை,
பெரும் காற்றில் வலுவில்லாத மூங்கில் பாலம் நொறுக்கப்படுவது போல, முற்றிலும் அழித்து விடுகின்றானோ
—அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறான், மறுமையையும் கைவிடுகிறான்,
அறவை தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

எந்த விதமான பவம் எடுத்தாலும் (தோற்றத்திலும்),
பூக்காத அத்திமரத்தில்
பூக்களைப் வீணாகத் தேடுவதைப்போல
அதில் சாரமில்லாததை உணரும் ஒரு துறவி
— இம்மையையும் கைவிடுகிறான், மறுமையையும் கைவிடுகிறான்,
அறவை தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

எவனொருவன் தன் உள்ளத்தில் பொறாமையும், வெறுப்பும் இல்லாமல் உள்ளானோ,
‘இப்படி ஆக வேண்டும்’, இல்லாவிட்டால் ‘அப்படி ஆக வேண்டும்’ என்பனவற்றையெல்லாம் கடந்து செல்கின்றானோ
—அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறான், மறுமையையும் கைவிடுகிறான்,
அறவை தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

எவனொருவன் தீய எண்ணங்களையெல்லாம் எரித்து விடுகிறானோ,
தன் உள்ளத்திலிருந்து அவற்றை முழுவதும் துண்டித்து விடுகின்றானோ
—அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறான், மறுமையையும் கைவிடுகிறான்,
அறவை தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

மிகத் தூரம் செல்லாமலும் அதேசமயம் பின்தங்கி விடாமலும்
சிக்கலான உலக விஷயங்களைத் தாண்டிச்சென்ற துறவி (உலக விஷயங்களில் சிக்கிக் கொள்ளாமல்)
—இம்மையையும் கைவிடுகிறான், மறுமையையும் கைவிடுகிறான்,
அறவை தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

அதிக தூரம் செல்லாமலும் அதேசமயம் பின்வாங்காமலும்
“இவை எல்லாம் மாயை (சாரமற்றவை),” என்று உலகைப் புரிந்தவன்
—அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறான், மறுமையையும் கைவிடுகிறான்,
அறவை தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

அதிக தூரம் செல்லாமலும், அதேசமயம் பின்வாங்காமலும்
“இவை எல்லாம் மாயை (சாரமற்றவை),” என்று அவா இல்லாமல் வாழத் தெரிந்த துறவி
— இம்மையையும் கைவிடுகிறான், மறுமையையும் கைவிடுகிறான்,
அறவை தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

மிகத்தூரம் செல்லாமலும் அதேசமயம் பின்வாங்காமலும்
“இவை எல்லாம் மாயை (சாரமற்றவை),” என்று காமம் இல்லாமல் வாழத் தெரிந்தவன்
— அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறான், மறுமையையும் கைவிடுகிறான்,
அறவை தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

மிகத்தூரம் செல்லாமலும் அதேசமயம் பின்வாங்காமலும்
“இவை எல்லாம் மாயை (சாரமற்றவை),” என்று வெறுப்பு இல்லாமல் வாழத் தெரிந்தவன்
—அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறான், மறுமையையும் கைவிடுகிறான்,
அறவை தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

மிகத்தூரம் செல்லாமலும் அதேசமயம் பின்வாங்காமலும்
“இவை எல்லாம் மாயை (சாரமற்றவை),” என்று அறியாமை இல்லாமல் வாழத் தெரிந்தவன்
—அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறான், மறுமையையும் கைவிடுகிறான்,
அறவை தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

தற்போது செயலற்று இருந்தாலும் எளிதில் தூண்டப்படக் கூடிய மாசுகள் இல்லாதவன்
அவன் திறனற்ற பண்புகள் வேறோடு பிடுங்கப் பட்டிருப்பவன்
—அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறான், மறுமையையும் கைவிடுகிறான்,
அறவை தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

கவலையினால் உண்டான மன நிலைகள் இல்லாதபோது
அவன் மீண்டும் புவியில் பிறக்க காரணம் இல்லாததால்,
—அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறான், மறுமையையும் கைவிடுகிறான்,
அறவை தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

பற்றினால் உண்டான மன நிலைகள் இல்லாதபோது
இருந்தால் அவன் கட்டுப்பட்டு இருக்கக்கூடும்
—அப்படிப்பட்ட துறவி இம்மையையும் கைவிடுகிறான், மறுமையையும் கைவிடுகிறான்,
அறவை தன் தேய்ந்து போன சட்டையைக் கைவிடுவது போல.

ஐந்து கிலேசங்களையும் கைவிட்ட ஒருவன்
சந்தேகங்கள் இல்லாமல் நிதானத்தோடும், உள்ளத்தில் எந்தத் தீமையும் இல்லாமல் இருப்பவன்