சுத்த நிபாதம் 1.2
தனிய சூத்திரம்: தனிய என்ற மாட்டுப் பண்ணைக்காரன்
தனிய, மாட்டுப்பண்ணைக்காரன்:
“அரிசி வெந்துவிட்டது,
பால் கரக்கும் எனது வேலையும் முடிந்தது.
என் மக்களோடு நான் வாழ்கிறேன்
மாஹி நதிக்கரை ஓரம்;
எனது குடிலுக்குக் கூரை உள்ளது, என் வீட்டு நெருப்பு எரிகிறது:
எனவே மழை தெய்வமே! வேண்டுமானால்,
மழை பெய்ய விடு.”புத்தர்:
“கோபத்திலிருந்து விடுபட்டு விட்டேன்,
என் பிடிவாதம் அகன்று விட்டது,
ஓர் இரவுக்காக வாழ்கிறேன்
மாஹி நதிக்கரை ஓரம்;
என் குடிலின் கூரை திறந்திருக்கிறது,
என் நெருப்பு அணைந்து விட்டது:
எனவே மழை தெய்வமே! வேண்டுமானால்,
மழை பெய்ய விடு.”தனிய:
“கொசுக்களும் மாட்டில் மொய்க்கும்
ஈக்களும் காணவில்லை.
மாடுகள் புல் வெளியில் மேய்ந்து கொண்டிருக்கின்றன,
அங்கு புல் செழிப்பாக உள்ளது.
மழை பெய்தாலும் மாடுகள் தாங்கிக் கொள்ளும்:
எனவே மழை தெய்வமே! வேண்டுமானால்,
மழை பெய்ய விடு.”புத்தர்:
“நன்றாகச் செய்யப்பட்ட ஓர் தெப்பம்,
கட்டப்பட்டிருக்கிறது.
ஆற்றைக் கடந்து,
அக்கரைக்குச் சென்று விட்டதால்,
வெள்ளத்தை அடக்கி விட்டேன்.
இனி தெப்பம் எனக்குத்
தேவைப்படவில்லை:
எனவே மழை தெய்வமே! வேண்டுமானால்,
மழை பெய்ய விடு.”தனிய:
“என் மனைவி நன்னடத்தை உள்ளவள்,
அவள் அசட்டையுடையவள் அல்ல.
உள்ளம் கவர்பவள், என்னுடன் நீண்ட நாள் வாழ்ந்திருக்கின்றாள்.
அவளைப் பற்றித் தீய செய்தி எதையும் நான் கேட்டதில்லை:
எனவே மழை தெய்வமே! வேண்டுமானால்,
மழை பெய்ய விடு.”புத்தர்:
“என் மனம் ஒழுக்கம் உடையது, விடுவிக்கப்பட்டது,
நீண்ட நாள் பேணி வளர்க்கப்பட்டது,
நன்றாகப் பழக்கப் படுத்தப்பட்டது,
என்னுள் எந்தத் தீவினையையும் காண முடியாது:
எனவே மழை தெய்வமே! வேண்டுமானால்,
மழை பெய்ய விடு.”தனியா:
“என் வருமானத்தைக் கொண்டு
என் தேவைகளைப் பூர்த்தி செய்கிறேன்.
எனது மக்கள் ஒற்றுமையோடு வாழ்கின்றனர்,
நோயில்லாமல் உள்ளனர்.
அவர்களைப் பற்றித் தீய செய்தி எதையும்
நான் கேட்டதில்லை:
எனவே மழை தெய்வமே! வேண்டுமானால்,
மழை பெய்ய விடு.”புத்தர்:
“நான் யாருக்காவும் பணி புரியவில்லை,
உலகெங்கும் சுற்றித் திரிகிறேன்
எனது பரிசோடு [நான் விழிபுற்றதனால் கிடைத்த]
சம்பாதிக்க வேண்டியதற்குக்
காரணம் காணவில்லை:
எனவே மழை தெய்வமே! வேண்டுமானால்,
மழை பெய்ய விடு.”தனியா:
“மாடுகளும், இளங்காளைகளும்,
சினை மாடுகளும், இனப்பெருக்கம் செய்யும் மாடுகளும்,
மந்தைக்குத் தலைவனான ஒரு பெரும் காளையும் உள்ளன:
எனவே மழை தெய்வமே! வேண்டுமானால்,
மழை பெய்ய விடு.”புத்தர்:
“மாடுகளும் இல்லை, இளங்காளைகளும் இல்லை,
சினை மாடுகளும் இல்லை, இனப்பெருக்கம் செய்யும் மாடுகளும் இல்லை,
மந்தைக்குத் தலைவனான ஒரு பெரும் காளையும் இல்லை :
எனவே மழை தெய்வமே! வேண்டுமானால்,
மழை பெய்ய விடு.”மரக் கழிகள் நடப்பட்டுள்ளன, அசைக்கமுடியாதவை அவை.
நன்றாகப் பின்னப்பட்ட புதிய
நாணல்புல் தடுப்புகள்
இளம் காளைகளும் உடைக்க முடியாதவை:
எனவே மழை தெய்வமே! வேண்டுமானால்,
மழை பெய்ய விடு.”புத்தர்:
“கட்டுகளை நான்,
பெரும் காளையும்,
பெரும் யானையும்
அழுகிய கொடிகளைப் பிய்த்தெடுப்பது போல,
உடைத்தெறிந்தேன்.
நான் இனி என்றும் கருப்பையில் புக மாட்டேன் (மறுபிறப்பு எடுக்க மாட்டேன்):
எனவே மழை தெய்வமே! வேண்டுமானால்,
மழை பெய்ய விடு.”பெரும் முகில்
மழையை
உடனடியாகக் கொட்டியது,
மேடு பள்ளங்களை நிரப்பியது.
மழைத் தெய்வம் கொட்டுவதைக் கேட்ட
தனியா கூறினார்:
“நாம் எவ்வளவு நன்மை பெற்றோம்
ஆசீர்வதிக்கப்பட்டவரை
நாம் பெற்றதினால்!நாம் அவரிடம்,
அறிவாற்றல் பெற்ற அந்த ஒருவரிடம்
அடைக்கலம் புகுவோம்.நீங்கள் எங்கள் குருவாவீர்களாக, மாமுனியே.
என் மனைவியும் நானும் ஒழுக்கத்தோடு உள்ளோம்.
நாம் புனித வாழ்வைத் தொடர்வோம்
சரியாகப் புனித வாழ்க்கைக்குச் சென்றவரிடம்.
மூப்பின் மரணத்தின்
அக்கறைக்குச் சென்று,
துக்கத்துக்கும், அழுத்தத்திற்கும்
முடிவு கட்டுவோம்.”மாரன்:
குழந்தைகள் உள்ளோர்
குழந்தைகளால் மகிழ்கின்றனர்.
மாடுகள் வைத்திருப்போர்
மாடுகளால் மகிழ்கின்றனர்.
ஒருவனின் மகிழ்ச்சி
அவர் சேர்த்த பொருட்செல்வத்தினால் உண்டாகிறது.
எனவேதான் பொருட்கள் இல்லாதவன்
மகிழ்ச்சி அடைவதில்லை.”புத்தர்:
குழந்தைகள் உள்ளோர்
குழந்தைகளால் துயரப்படுகின்றனர்
மாடுகள் வைத்திருப்போர்
மாடுகளால் துயரப்படுகின்றனர்
ஒருவனின் துயரம்
அவர் சேர்த்த பொருட் செல்வத்தினால் உண்டாகிறது.
ஏனவே தான் பொருட்கள் இல்லாதவன்
துயரப்படுவதில்லை.”