சுத்த நிபாதம் 4.10

புராபேத சூத்திரம்—உடல் சிதைவுக்கு முன்னர்

கேள்வி:
எப்படிப்பட்ட நற்காட்சியோடு,
எத்தகைய பண்புகள் கொண்டவர்
அமைதியானவர் எனப்படுகிறார்?
கோதமரே, அந்த மாமனிதரைப் பற்றிக் கூறுங்கள்.

புத்தர்:
உடலின் சிதைவுக்கு முன்னர் ஆசைகளிடமிருந்து விடுபட்டவர்,
கடந்தகாலத்தோடு பிணைக்கப்படாதவர்,
நிகழ்காலத்தில் தயாராக இருப்பவர்,
எதிர் காலத்துக்கு ஏங்காதவர்;

கோபப்படாதவர்,
பயப்படாதவர்,
பெருமிதப் பேச்சில்லாதவர், எரிச்சலடையாதவர்,
மெய்ஞ்ஞானமுள்ள அறிவுரை தருபவர்,
அமைதியானவர்,
அடக்கத்துடன் பேசும் முனிவர்;

எதிர் காலத்தோடு பற்றுக் கொள்ளாதவர்,
இறந்த காலத்தை நினைத்து ஏங்காதவர்,
புலன் தொடர்புகளின் மத்தியிலும் தனிமையைக் காண்பவர்
நிலையான கருத்துகளால் நெறிப்படுத்தப்படாதவர்;

அடங்கியவர்,
வஞ்சனை இல்லாதவர்,
பொருளாசையும், பேராசையும் இல்லாதவர்,
மரியாதை இல்லாதவராக இல்லாமல்,
வெறுக்கத்தக்கவராக இல்லாமல்,
கோள் மூட்டிப் பேசாதவர்;

இன்ப உணர்ச்சிகளை நாடாதவர்,
அகந்தை இல்லாதவர், மென்மையானவர், நுட்பமான அறிவுடையவர்,
கேள்விச்செவியனாக (கேள்வியுற்றதையெல்லாம் நம்புவோன்) இல்லாதவர்,
எதனாலும் வெறுப்படையாதவர்;

பொருள் சேர்க்கும் எண்ணத்தோடு பயிற்சியை மேற்கொள்ளாதவர்,
எதுவும் பெறவில்லயென்றாலும் கலங்காதவர்,
விருப்பங்களினால் தடைப்படாதவர்,
வாய்ச் சுவைக்கு பேராசைப் படாதவர்;

சமமான மனநிலையுடையவர்,
எப்போதும் அக்கறையுடையவர்,
இந்த உலகில், தான் சமமானவர், மேன்மையானவர், தாழ்மையானவர்
என்ற கருத்துக்கள் இல்லாதவர்,
தற்பெருமை கொள்ளாதவர்;

எதனோடும் பிணைத்துக் கொள்ளாதவர்,
வாய்மையை அறிந்ததனால் கட்டு இல்லாதவர்;
தோன்றவும் (பவம்) தோன்றாமலிருக்கவும் விருப்பமில்லாதவர்:

இப்படிப்பட்டவரையே நான் அமைதியானவர் என்பேன்.
அவர் புலன் இன்பங்களுக்கு அக்கறை காட்டுவதில்லை.
அவருள் சுமை ஏதும் இல்லை;
அவர் பற்றுகள் இல்லாதவர்.

மக்களோ, மந்தையோ, காடு, நிலம், சொத்தோ அவருக்கு இல்லை.
அவருக்குப் பற்றுக் கொள்ள எதுவும் இல்லை,
கைவிடவும் எதுவும் இல்லை.

சாதாரண மக்கள்,
சன்னியாசிகள் அல்லது சமயம் சார்ந்தவர் பேசக்கூடியவற்றில்
அவருக்கு அக்கறை இல்லை.
அதனால் அவர்களது சர்ச்சைகளினால் அவர் பாதிக்கப் படுவதில்லை.

பேராசையிடத்திலிருந்தும், சுயநலத்திலிருந்தும்
விடுபட்ட முனிவர்,
தன்னைப் பற்றிப் பேசும்போது,
தான், மேன்மையானவர், சமமானவர் அல்லது தாழ்ந்தவர் என்று குறிப்பிடுவதில்லை.
காலச் செயற்றொடருக்குத் திரும்பாதவர்;
காலம் என்ற கருத்திலிருந்து விடுபட்டவர்.

உலகில் எதனையும் ‘தனது’ என்று கருதாதவர்.
இல்லாததனால் (கிடைக்காததனால்) அதற்காக வருந்தாதவர்.
கண்மூடித்தனமாகத் சமயப் போதனைகளைத் தொடராதவர்.
அவரே உண்மையான அமைதியுடையவர்.