சுத்த நிபாதம் 4.9

மகந்திய சூத்திரம் – மகந்தியருக்கு

மகந்தியர் தன் மகளை மணம் புரிந்து கொள்ளுமாறு புத்தரை வேண்டுகிறார். புத்தரின் பதில்:

(மாரனின் மூன்று புதல்விகளான) தன்ஹா, அராதி, ராகா ஆகியோரைப்
(திருப்தியின்மை, வேட்கை மற்றும் அவா) பார்த்த பின்பும்
உடல் உறவு கொள்ளும் ஆசை தோன்ற வில்லை. அப்படியிருக்க சிறுநீரும், மலமும் கொண்ட இதனை நான் ஏன் விரும்பவேண்டும்?
இதனை என் கால்களால் தொடுவதற்கும்
எனக்கு விருப்பமில்லை.

மகந்தியர்:
பல மன்னர்களும் மணக்க ஆசைப்படும்
இந்த இரத்தினக்கல் போன்ற பெண்ணை வேண்டாமென்றால்,
எந்த நோக்கத்திற்காக, ஒழுக்கத்திற்காக, பயிற்சிக்காக, வாழ்க்கைக்காக,எதை அடைய நீங்கள் பிரகடனம் செய்கின்றீர்கள்?

புத்தர்:
ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்
என்ற கோட்பாடுகளுக்காக நான்
‘இதனைப் பிரகடனம் செய்கின்றேன்’
என்று கூறவில்லை.
ஆனால் கோட்பாடுகளை ஆராய்ந்து, அவற்றோடு பற்றில்லாமல் தேடுகையில்
மன அமைதியைக் காண்கின்றேன்.

மகந்தியர்:
முனிவரே, கற்பனைக் கருத்துக்களைப் பற்றி,
பற்றில்லாமல் பேசுகின்றீர்கள்.
இந்த ‘மன அமைதி’ :
அப்படியென்றால் என்ன?
அது ஒரு ஞானியால்
எவ்வாறு விளக்கப்படுகிறது?

புத்தர்:
ஒருவர் கொண்டுள்ள
கருத்து,
படிப்பு,
அறிவு,
பின்பற்றும் விதி அல்லது
செய்யும் பயிற்சியை வைத்து
அவர் தூய்மையைப் பற்றிக்
கூற முடியாது என்று
ஞானி கூறுகிறார்.
அதே சமயம் ஒருவர்
கருத்து இல்லாமல்,
படிப்பில்லாமல்,
அறிவில்லாமல்,
விதிகளைப் பின்பற்றாமல் அல்லது
பயிற்சி செய்யாமல்
தூய்மையைப் பெற முடியாது.
இவற்றை விட்டு விட்டு,
பற்றில்லாமல், அமைதியாக,
தனியாக ஒருவர்
பிறப்பெடுக்க ஏங்குவதில்லை.

மகந்தியர்:
ஒருவர் கொண்டுள்ள
கருத்து,
படிப்பு,
அறிவு,
பின்பற்றும் விதி அல்லது
செய்யும் பயிற்சி ஆகியவை
அவர் தூய்மையைக் குறிப்பதில்லை
என்று ஞானி கூறுகிறார்.
அதே சமயம் ஒருவர்
கருத்து இல்லாமல்,
படிப்பில்லாமல்,
அறிவில்லாமல்,
விதிகளைப் பின்பற்றாமல் அல்லது
பயிற்சி செய்யாமல்
தூய்மையைப் பெற முடியாது
என்றும் ஞானி கூறுகிறார்.
அப்படியானால் இந்தப் போதனை குழப்பமாகத் தோன்றுகிறதே?
ஏனென்றால் கருத்தைக் கொண்டு
—கருத்தின் வழியாக—
ஒருவர் தூய்மை பெறுவதாகச் சிலர் கூறுகின்றனரே?

புத்தர்:
ஏதோ ஒரு கருத்தை மனத்தில்
நினைத்துக் கொண்டு
கேள்விகள் கேட்கின்றீர்.
குழப்பம் நீர் புரிந்து கொண்டதில் தான்
உள்ளது.
[நான் சொல்வதன்] சாரத்தை
நீர் சிறிதும் புரிந்து கொள்ளவில்லை.
எனவே போதனை குழப்பமானதென
நினைக்கின்றீர்.

ஒருவர் மற்றவருக்குத் தான் சமமானவர், அல்லது மேன்மையானவர், அல்லது தாழ்ந்தவர்
என்ற கருதிக் கொண்டால் அந்தக் கருத்தின் காரணமாக மற்றவரோடு அவருக்குச் சிக்கல் உண்டாகும்.
ஆனால் இதுபோன்ற எண்ணங்களால் பாதிக்கப் படாதவர் சமமானவர், மேன்மையானவர், தாழ்ந்தவர் என்று யாரையும் கருதுவதில்லை.

எந்தக் கருத்தை ஒரு பிராமணன்
“இது உண்மை” அல்லது “இது பொய்மை” என்பார்?
யாருடன் வாதிடுவார்?
மற்றவரோடு ஒப்பிடுகையில் தான் ‘சமம்’ அல்லது ‘சமமற்றவன்’
என்று கருதாத ஒருவர் யாரோடு சர்ச்சைக்குச் செல்வார்?

வீடு துறந்து சுதந்திரமாகச்
சமூகத்தில் வாழும் முனிவர்
கிராமங்களில் யாருடனும்
நெருங்கிப் பழகுவதில்லை.
புலன் ஆசைகளைக் கைவிட்டவர்,
ஏக்கங்களைக் கைவிட்டவர்
மக்களோடு கலகம் விளைவிக்கும்
விவாதங்கள் நடத்த மாட்டார்.

தவிர்க்க வேண்டிய செயல்களை ஒதுக்கி வாழும் ஒரு மாமனிதர்,
அவற்றை எடுக்கவும் கூடாது; அவற்றுக்காக வாதிடவும் கூடாது.

சேற்றிலும், நீரிலும் இருக்கும் தாமரை
கறைபடியாமல் இருப்பது போல
முனிவர்,
—அமைதியை விளக்குபவர்—
பேராசை இல்லாமல்,
புலன் இன்பங்களாலும்,
உலக நிகழ்ச்சிகளாலும்
கறைபடியாதவர்.

வாய்மையைக் கண்டவர்
தனது கருத்துக்களாலும் எண்ணங்களாலும் அகம்பாவம் கொள்வதில்லை.
ஏனென்றால் அவற்றைத் தனது என்று
அவர் நினைப்பதில்லை.
அப்படிப்பட்டவரை அவர் ஒழுகும் விதிகளையும், பயிற்சியினையும்மதம் சார்ந்த அறிவோடு
வைத்து மதிக்கக் கூடாது.
அவர் வேட்கையினால்
ஈர்க்கப் படுவதில்லை.

மனக்குறிப்புகளோடு பற்றில்லாதவருக்கு
எந்தக் கட்டும் இல்லை;
விவேகத்தினால் விடுவிக்கப்பட்டவருக்கு
மயக்கம் இல்லை.
மனக்குறிப்புகளோடும், கருத்துக்களோடும்
பற்றுக் கொண்டோர்
உலகில் போகும் இடமெல்லாம்
சண்டையிட்டுக் கொண்டே வாழ்கின்றனர்.